ம் நாடு புனித நாடு. சத்யதர்ம நாடு. பக்த ஞான தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த, வாழுகின்ற புண்ணிய பூமி. இந்த நாட்டில் வாழும் நாமும் புண்ணியம் செய்தவர்களே.

ஆண் ஞானிகள் மட்டுமின்றி, பெண்களிலும் காரைக்கால் அம்மையார், ஔவையார், மீராபாய், சக்குபாய், ஞானபாய், ஆவுடையக்காள், ஆண்டவன் பிச்சி போன்ற ஞானப் பெண்மணிகள் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் ஒருவரான ரமணபக்த மாதா ஜானகிதேவி பற்றி இங்கு சற்று சிந்திப்போம்.

இல்லற வாழ்க்கையை மேற்கொண்ட அன்னை சாரதா தேவி, ஆண்டவன் பிச்சி அம்மாளுக்கு ஒப்பானவர் இவர். கேரள மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, பக்தி ஞானத்தின் ஊறி, ரமணரின் சிஷ்யையாகி, தியானத்திலேயே பல தெய்வ உருவங்களை தரிசித்தவர் இவர். சாதுக்கள் தாங்களே இவரைத் தேடி வர, சாந்நித்யம் பெற்று, குண்டலினியில் ஆழ்ந்து, 32 வயதிலேயே விதேக முக்தி நிலை பெற்று 63 வருடங்கள் வாழ்ந்தார்.

1964-ல் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த அருணாசல மகிமை என்னும் தொடரில் இந்த ஜானகி மாதாவைப் பற்றிப் படித்துள்ளேன். 2013 டிசம்பரில் என் தம்பி மகன் திருமணத்திற்காக தஞ்சாவூர் சென்றிருந்தேன். பெரிய கோவில், பங்காரு மாரியம்மனை தரிசித்தேன். மறுநாள் காலை சிறிது நடக்கலாமே என்று சென்றேன். இரு பெண்கள் பேசிக்கொண்டிருந்தபோது, வரலாமே என்ற சொல் என் காதில் விழுந்தது. அங்கிருந்த வீட்டைப் பார்த்தேன். அதுதான் ஜானகி மாதா ஆசிரமம். திகைத்து நின்றேன். அவர்களிடம் அனுமதிகேட்டு மாதாவை தரிசித்து நெகிழ்ந்தேன். நினைத்தால் இப்போதும் புல்லரிக்கிறது. அங்கு கமழ்ந்த மல்லிகை மணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

Advertisment

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கொல்லங்கோட்டிலுள்ள புது கிராமத்தில் வாழ்ந்து வந்தனர் வைத்தியநாத பட்டர்- செல்லம்மாள் தம்பதியர். அங்குள்ள விஸ்வநாதர் கோவிலின் அறங்காவலராக இருந்தவர் வைத்தியநாதர். பழனி ஆண்டவர் பக்தர். ஆயுர்வேதம் அறிந்தவர். விஷக்கடிக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார். மரியாதையான குடும்பம்.

ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த செல்லம்மாள் தன் உறவுப் பெண்களுடன் பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிலத்தைப் பார்வையிடச் சென்றாள். அங்கே பிரசவ வலி வர, ஒரு குடிசையில் பெண் குழந்தை பிறந்தது. ஜனக மகாராஜன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய நிலத்தை உழுதபோது கிடைத்த குழந்தை ஜானகி. அதுபோல் இந்தக் குழந்தையின் பெயரும் ஜானகி.

பெயருக்கு ஏற்றாற்போல ராமப்பிரியை.ஒரு சமயம் யாரோ ஒரு சாது அங்கு வந்தார். அவரிடம் குழந்தை, கடவுள் என்கிறார் களே அவர் யார் நாம் காண முடியுமா என்று கேட்டாள். குழந்தைக்குப் புரியாது என்றெண்ணிய அவர் பதிலளிக்கவில்லை. குழந்தை மீண்டும் கேட்க, அதற்கு கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து, இதை ஜபித்து வா; கிருஷ்ண தரிசனம் கிடைக்கும் என்றார்.

Advertisment

அதன்படியே நம்பிக்கையோடு ஆழ்ந்து ஜபித்து வர கிருஷ்ண தரிசனம் கிட்டியது. அப்போது அவளுக்கு வயது எட்டுதான். ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றாள்.

அவ்வளவுதான்.

குடும்பத்தில் நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரிகள். இவள் மனது அலாதியாக இருந்தது. எனவே சென்னையிலிருந்த தனது மாமா வழக்கறிஞர் கிருஷ்ண ஐயர் என்பவரது வீட்டுக்கு இடம்பெயர்ந்தாள். தமிழ் பேச, எழுத, படிக்கத் தெரியாதவள் தன் முயற்சியால் கற்றாள்.

அக்கால முறைப்படி அவளது பதின்மூன் றாம் வயதில் திருமணம் நடந்தது. கணவர் பெயர் டாக்டர் கிருஷ்ணய்யர். 32 வயது.

அவர் முன்னமே திருமணமாகி மனைவியை இழந்தவர். ஆறு மற்றும் இரண்டு வயதுள்ள பொன்னம்மா அன்னபூரணி என்னும் இரண்டு சிறுகுழந்தைகள் அவருக்கு இருந்தன. எனவேதான் குழந்தைகளை வளர்க்க மறுமணம் செய்துகொண்டார். அந்தக் குழந்தைகளை அன்புடன் அரவணைத்த ஜானகி, கணவருக்கும் சிறந்த பத்தினியாகத் திகழ்ந்தாள்.

ஆண் குழந்தை இல்லையே என்னும் வருத்தம் கிருஷ்ணனுக்கு இருந்தது. ஒருநாள் அங்குவந்த சந்நியாசி ஒருவர், ஜாதகப்படி கிருஷ்ணனுக்கு ஆண் குழந்தை பாக்கியம் இல்லை என்றும், என்றாலும் சனிக்கிழமை விரதமிருந்து பழநி ஆண்டவனை வேண்டி னால் முருகன் அருளால் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு என்றும் கூறி மறைந்தார். அவ்வாறே பழனி ஆண்டவரை தரிசித்து விரதமிருக்க ஆண் குழந்தை பிறந்தது.

அதற்கு ஸ்ரீனிவாச சுப்பிரமணியன் என்று பெயரிட்டனர். அடுத்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சாரதா என்று பெயர் சூட்டினர். இதையடுத்து கிருஷ்ணனின் முதல் மகளுக்குத் திருமணமும் நடைபெற்றது.

ss

ஒருசமயம் ஜானகி காளி தரிசனம் கண்டாள். மேலும் வெளிநாடு செல்வதாகவும் கனவு வந்தது. அப்போது ஜானகிக்கு 16 வயதுதான். மறுநாள் கணவர் தான் அலுவலக வேலையாக வியன்னா (ஆஸ்திரியா) போக வேண்டியுள்ளது என்றார்.

கணவன் மீதுள்ள அன்பால் தானும் வருவதாகக் கூறினாள் ஜானகி. செலவு அதிகம்தான். ஆனால் இயலாது என்று கூற கணவனால் முடியவில்லை. எனவே குடும்பமே வியன்னா சென்றது; ஜானகியின் கனவும் பலித்தது.

பின்னர் இந்தியா திரும்பினர். கிருஷ்ணனுக்கு மதுரைக்கு வேலை மாற்றமாயிற்று. இந்நிலையில் கிருஷ்ணனின் இரண்டாவது மகள் அன்னபூரணிக்கு டாக்டர் பத்மநாபன் என்பவருடன் திருமணம் நடந்தது. அவர் ஒரு ரமண மகரிஷி பக்தர். கேரளாவில் பிரேம சங்கம் என்னும் ஒரு அமைப்பை ஆரம்பித்து ரமணரின் கொள்கை, தியானம், துதி ஆகியவற்றைப் பரப்பினார். அப்போதுதான் ஜானகிக்கு ரமணர் பற்றிய அறிமுகம் உண்டாயிற்று. தானும் அவர்போன்று தன்னை அறியவேண்டும் என்னும் ஆழ்ந்த ஆர்வம் ஏற்பட்டது. (இனி ஜானகி மாதா என்றே அழைப்போம்.)

ஜானகி மாதாவுக்கு இல்லறத்தில் நாட்டம் குறைந்து ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரித்தது. 18-1-1935 அன்று ஒரு நாகம் தரிசனம் தர, அது குண்டலினி சக்தியை எழுப்பி சகஸ்ராரத்தில் திகழ்ந்தது. ஜானகி தன்னிலை மறந்தார். பின்னர் கும்பகோணத்திலிருந்த முதல் மகள் பொன்னம்மா வீட்டுக்குச் சென்றாள். அங்கு அண்ணாசாமி என்னும் சந்நியாசி வந்து, நான்தான் ரமணமகரிஷி. உன்னைக் காண மூன்றரை ரூபாய் செலவு செய்து வந்தேன் என்றார். ஜானகி மாதா வியந்தார். ஆனாலும் ரமணரை தரிசிக்க திருவண்ணாமலை செல்லவில்லை.

நடக்க வேண்டியவை உரிய காலத்தில்தான் நடக்கும்; ஆனால் நடக்காமல் போகாது என்று ரமண மகரிஷி சொல்வாரே!

கிருஷ்ணனும் ஜானகி மாதாவும் 20-4-1935 அன்று ரமணாசிரமம் சென்றனர். அப்போது மாலை நேர வேத பாராயணம் நடந்து கொண்டிருந்தது. தியான அறையில் இருந்த ரமணரை தரிசித்தனர். ரமணரின் நயன தீட்சை ஜானகி மாதாவுக்குக் கிடைத்தது. அங்கேயே இரண்டரை மணி நேரம் தியானத்தில் மூழ்கினார். ருத்ராட்சத்துடன் கூடிய சதாசிவராக ரமண தரிச னம் பெற்றார்.

ரமணரிடம் தன் தரிசனம நிலைகள், சாதுக்கள் வருகை பற்றி எல்லாம் கூறினார். மேலும் தான் முக்தியடைய விரும்புவதாகவும், இல்லறத்தில் உழல விருப்பமில்லை என்றும் கூறினார். ஆனால், முருகன் கனவில் வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க விரும்புவதாகக் கூறியதாகவும் சொன்னார். உன் தியானநிலை தொடரட்டும் என்றார் ரமணர். அன்று மாலைவரை ஆசிரமத்திலிருந்துவிட்டு பின்னர் திருச்சி திரும்பினர்.

1935-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வியாச பூர்ணிமா தினம். அன்று தன் அறையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் மாதா ஜானகி.

அப்போது ஐந்துமாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென்று ஒரு மகாபுருஷர் தோன்றி ஜோதி மயமாக அவருள் ஆழ்ந்தார். முருகன் சிவ ஜோதி தானே? தெய்வீகச் செயல்கள் நமக்குப் புரியாது. அவை எல்லாரிடமும் நிகழாது.

கணவருக்கு வேலை தஞ்சைக்கு மாற்றலானது. அங்கு14-11-1935 அன்று ஜானகி மாதா வுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை முன்பே ஒரு சந்நியாசி கூறியிருந்தார். அதன்படி குழந்தைக்கு சுவாமிநாதன் என்று பெயர் சூட்டப் பட்டது. (அவரே ஓய்வுபெற்ற விங் கமாண்டர் சாமிநாதன்.)

1935 அக்டோபர் மாதம் கிருஷ்ணனுக்கு கடலூருக்கு வேலை மாற்றமானது. அங்கிருந்து ரமணாசிரமம் சென்றனர். ஜானகி மாதா ரமணரிடம், எனக்கு ஜீவன்முக்தியடையவும், ஞானம் பெறவும் ஆசை. ஆனால் எனக்கு குருவென்று யாருமில்லையே என்றார். உன் விருப்பம் நிறைவேறும். நானே உனக்கு குரு. இல்லற வாழ்க்கையில் இருந்துகொண்டே சந்நியாசிபோல தியானத்தில் ஆழ்ந்திரு.

உனக்கு அமைந்த கணவனோடு கடமையைச் செய் என்றார் ரமணர். (எனக்கு குருவும் இல்லை சீடரும் இல்லை என்றவர் ரமணர்.)

ரமணாசிரமத்தில் பெண்களுக்குக் கழிவறை, குளியலறை வசதி இல்லாதது கண்டு, தன் செலவில் அதைச் செய்தார் ஜானகி மாதா. ஆசிரமத்தில் மின்சார வசதி இல்லாததால் தன் மாப்பிள்ளை சீதாபதியைக் கொண்டு அதையும் ஏற்படுத்த வழி செய்தார்.

12-10-1937... மாதாவுக்கு குண்டலினி சக்தி எழும்பி சஹஸ்ராரத்தை அடைந்தது. (அதற்கு மாதா முயற்சிக்கவே இல்லை.) இதனால் தீவிரமான தலைவலி உண்டாயிற்று. அண்ணா சாமி என்னும் யோகி வந்தார். குரு வருளால் நல்லதே நடந்துகொண்டிருக் கிறது என்று கூறி மறைந்தார். அந்த நிலை இருபத்தாறு நாட்களுக்கு நீடித்ததாம். கிருஷ்ணனும் ஜானகி மாதாவும் ரமணாசிரமம் வந்து தரிசித்து அனுபவத்தைச் சொல்ல, அவர் நயன தீட்சை தந்து, எனக்கும் இவ்வாறு நடந்துள்ளது; நல்லதே என்றார்.

1938-ல் கிருஷ்ணனுக்கு ஆந்திராவிலுள்ள காக்கிநாடாவுக்கு வேலை மாற்றலானது. மாதாவுக்கு ரமணர் அருளால் 32 வயதிற்குள் ஜீவன்முக்த நிலை நிகழ்ந்தது. இந்த சமயத்தில் காஞ்சிப் பெரியவர் காக்கிநாடாவில் முகா மிட்டிருந்தார். மாதாவைக் காண எண்ணி அழைப்பு விடுத்தார். மாதாவோ, நான் அயல்நாடு சென்றவள். பெரியவரை தரிசிப்பது உசிதமில்லை என்றார். பெரியவரும், அது தெரியுமே; வரச்சொல் என்றாராம். கணவர் கிருஷ்ணனும் ஜானகி மாதாவும் பெரியவரை தரிசித்தனர்.

பாம்புக்குத்தானே வேறு பாம்புகளின் கால் தெரியும். உன் அனுபவங்களைக் கூறு எனக் கேட்டார் பெரியவர். மாதா மெய்சிலிர்க்க தன் அனுபவங்கள் அனைத்தையும் கூறினார். அதைக்கேட்டு மகிழ்ந்த பெரியவர், குங்கும வட்டில் தந்து, வந்திருக்கும் அனைத்து பக்தர் களுக்கும் உன் கையால் கொடு என்றார். அப்போது மாதா தன் தங்கச்சங்கிலியைக் கழற்றி, இது அம்பாளுக்கு என் காணிக்கை என்று சொல்லிக் கொடுத்தார். பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் நகையை வேறு நகையாகச் செய்து அம்பாளுக்கு அணிவிப்பர். இப்போதோ இந்த நகையை அம்பாள் அப்படியே ஏற்றுக் கொண்டாள் என்று சொல்லி அணிவித்தாராம். வினோதம்.

கிருஷ்ணன் 1941 ஜூலை மாதம் பணி ஓய்வு பெற்றார். சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவிலுள்ள வீட்டில் குடியேறினர்.

பக்தர்கள் திரளாக வந்து மாதாவை தரிசித்தனர்.

சத்சங்கங்கள் நிகழ்ந்தன. 24-7-1942 அன்று வியாச பூர்ணிமா பூஜை. மாதா ராமாயணப் பிரியை எனவே அனுமன் தரிசனம் தந்தார். அந்த நிலையில் அவரது உடல்நிலை சரியில் லாமல் போனது. மருத்துவப் பரிசோதனையில் எதுவும் புரியவில்லை. எந்தவிதமான உணர்ச்சி யும் வேதனையும் மாதாவிடம் இல்லை. ஆனால் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ராமச்சந்திரன் என பெயரிட்டனர்.

சென்னையில் பக்தர்கள் கூட்டம் பெருகிய தால் மாதாவின் தியானத்திற்கு தடை ஏற்பட் டது. எனவே அவரது கணவர் 15 1943-ல் தஞ்சை கணபதி நகரில், கணபதி கோவில் அருகே ஒரு வீடு வாங்கினார். அதுவே பின்னர் குருதேவி ஜானகி மாதா ஆசிரமமாக மாறியது.

அச்சமயம் கே. ஆ.ர் கே. மூர்த்தி தஞ்சை வர, மாதா அன்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் மாதாவின் சுயசரிதம் உருவாக்கப்பட்டது. அது ரமணாசிரமம் கொண்டு செல்ல, ரமணர் அதனை வாசிக்கச் சொல்ல, மாதா அதை விரும்பவில்லை. எனவே மாதாவின் சுயசரிதை நூல் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டது. 1996-ல் மாதாவின் சஷ்டியப்த பூர்த்தியன்றே வெளியிடப்பட்டது.

மாதாவோ ரமணாசிரமத்தின் அருகிலேயே தங்கி சந்நியாச ஆசிரமம் ஏற்க விரும்பினார். அவரது கணவரும் அதற்காக ரமணாசிரமம் அருகே ஒரு நிலமும் வாங்கினார். ஆனால் ரமணர் அங்கு வீடுகட்ட அனுமதிக்கவில்லை. ஆகவே தஞ்சையிலே வசித்தார்.

1945 மார்ச் மாதம்... மாதா உடல் தளர்ந்து குளியலறையில் விழுந்தார். அன்று ரமணா சிரமத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. ரமன இருக்கு கையில் புற்றுநோய் ஏற்பட்டு மூன்று முறை சிகிச்சை செய்தும் குணமாகவில்லை. உடல் வருந்தினாலும் பக்தர்களுக்கு தரிசனம் தருவதில் தவறவில்லை. 1950 பிப்ரவரி... ரமணரின் உடல்நிலை மீண்டும் சரிந்தது. 12-4-1950 அன்று மாதா ரமணாசிரமம் வந்தார். 14-4-1950 அன்று ரமணர் அருணாசல ஜோதியில் கலந்தார்.

மாதாவின் கணவர் உடல்நலம் குன்றினார்.

நானும் முக்தியடைய அருள்புரி என மாதா விடம் கேட்டார். நீங்கள் ரமணருக்கு சிகிச்சை செய்துள்ளீர்கள். அவரை என்னுடன் பலமுறை தரிசித்தவர்கள். அவரையே ஆழ்ந்து தியானித் தால் அவருக்குள் லயமாகலாம் என்றார். 15-5-1955-ல் கணவரின் ஜோதி மாதாவுக்குள் லயமானது. எனவே மாதா விதவையானார்.

காரியங்கள் முடிந்து அஸ்தி உடன் காசி வந்து மேற்கொண்டு காரியங்களை செய்தனர்.

மாதா கங்கையில் தனது தாலியை சமர்ப்பித் தார். ருத்ராட்ச மாலை, காவிநிற ஆடை ஏற்றார்.

6-6-1955-ல் தஞ்சை வந்து சேர்ந்தனர்.

தஞ்சை வீடு ஆசிரமமாகவே மாற்றி அமைக்கப்பட்டது. தினமும் பூஜைகள், துதிப்பாடல்கள், வழிபாடுகள் நடந்து வருகின்றன. 1966-ல் பக்தர்கள், உறவினர் கள் வேண்டுகோளுக்கிணங்க சஷ்டியப்த பூர்த்தி விழா இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

1966-ஆம் ஆண்டு இறுதியில் மாதாவின் இடது மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டது. 1969-ல்தான் கண்டறிந்தனர். 27-4-1969 அன்று மாதா ஸ்ரீ ரமணரின் ஐக்கியமானார்.

சந்நியாச தர்மம் ஏற்காததால் அவரது உடல் எரிக்கப்பட்டு, சிறு அஸ்தியுடன் ஆசிரமத்திலேயே சமாதி மாத்ருபூதேஸ்வரர் லிங்கத்துடன் அமைக்கப்பட்டது. வழிபாடுகள் நடக்கின்றன. வாய்ப்புள்ளவர்கள் மாதா ஜானகிதேவியை தரிசித்து ஞானம் பெற பிராத்திக்கிறோம்.